சென்னை காசிமேடு பகுதியில் விசைப்படகுகள் கட்டுமான இடத்தில் தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது
சென்னை காசிமேடு (Kasimedu) மீன்பிடி துறைமுகத்தில் வார்ப்பு பகுதிகளின் ஓரம் விசைப்படகுகள் கட்டுமான பணிகளுக்காகவும் பராமரிப்பு பணிகளுக்காகவும் கரைகளில் ஏற்றி வைத்து பணிகள் மேற்கொள்வது வழக்கம்.
அந்த இடத்தில் பணிகளின் போது தேவைப்படும் உதிரி பாகங்கள் மற்றும் மரக்கழிவுகள் அனைத்தும் அருகில் உள்ள இடத்தில் கொட்டி வைக்கப்படும் இன்று எதிர்பாராத விதமாக அந்த இடத்தில் தீ விபத்து ஏற்பட்டு காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி பற்றி ஏறிய தொடங்கியது.
தீ ஜூவாலைகள் கரும்புகைகள் உயர எழுந்து அப்பகுதி முழுவதும் கரும்புகை காணப்பட்டதால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்காக காசிமேடு மீன் பிடி துறைமுகத்திற்கு வந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராயபுரம் மற்றும் தண்டையார்பேட்டை பகுதிகளை சேர்ந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விசைப்படகுகளின் பராமரிப்பு பணிகளின் போது கொட்டப்படும் கழிவுகளில் பிளாஸ்டிக் ரசாயனம் கலந்த பொருட்கள் உட்பட ஏராளமான கழிவு பொருட்கள் அடங்கி இருப்பதால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசைப்படகு கட்டும் இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் சூரிய நாராயண சாலையில் கரும்புகள் சூழ்ந்து இரு வாகன ஓட்டிகள் கண்ணெரிச்சலுக்கு ஆளாகினர் சாலை முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது