தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூரில் உள்ள அர்த்த நாரீஸ்வரர் கோவிலில் திருவிழாவின் போது கோவில் தென்புறத்தில் பட்டாசு வெடித்த போது தீ விபத்து ஏற்பட்டதால் பக்தர்கள் அச்சமடைந்தனர்.
தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூரில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேரோட்டம் நடைபெறும். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாத
நிலையில், இந்த ஆண்டு ஆனித் திருவிழா கடந்த 3 -ந் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று 10-ம் நாள் திருவிழாவின் போது அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளிய தெப்ப தேரோட்டம் நடைபெற இருந்தது. இதைக்காண திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர். விழாவையொட்டி இரவு சுமார் 9.30 மணியளவில் கோவில் தென்புறத்தில் பட்டாசு வெடித்தனர். அப்போது அதிலிருந்து தீப்பொறி கோவில் முன்பு போடப்பட்டிருந்த கூரைப்பந்தலில் திடீரென்று விழுந்தது. இந்த தீ மளமளவென எரிந்ததில் அலங்கார பந்தல் முற்றிலும் எரிந்து நாசமானது.
இதைப் பார்த்ததும் பக்தர்கள் மற்றும் பெண்கள் கைக்குழந்தையுடன் நாலாபுறமும் சிதறி ஓடினர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு துறையினர் பாதுகாப்புக்காக அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு வாகனம் மூலமாக தண்ணீரை பீய்ச்சி அடித்து உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் அவர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர். சரியான வழிகாட்டு நெறிமுறை இல்லாத காரணத்தால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.