குஜராத் மாநிலத்தில் காகித தொழிற்சாலையில் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பல கோடி பொருட்கள் எரிந்து நாசமாகின.
குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம் வாபி நகரில் உள்ள ஒரு காகித தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆலையின் ஒரு பகுதியில் பற்றிய தீ மளமளவென அனைத்து இடங்களுக்கும் பரவியது.
இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
நான்கரை மணி நேரத்திற்கும் மேலாக எரிந்த தீயை கட்டுப்படுத்த முயன்றும் தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தொடர்ந்து தீயணைப்பு பணி நடைபெற்றது.
இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பேப்பர் மற்றும் மூலப்பொருட்கள் எரிந்து சாம்பலாகின. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.