சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை திடீரென தீப்பிடித்து எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டத்தில் 1986 ஆம் ஆண்டு 13 ஏக்கர் பரப்பளவில். மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டப்பட்டது. இந்த அரசு மருத்துவக் கல்லூரிக்கு நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் உள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு அருகே மேல் மாடியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக பெருமளவு புகைமூட்டம் எழுந்து அருகிலுள்ள அவசர சிகிச்சை வார்டு பகுதிகளில் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக அப்பகுதி பெருமளவு புகைமூட்டமாக காணப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திலிருந்து வந்த தீயணைப்பு படை வீரர்களும் தீயை அணைத்தனர். இதற்கிடையே மருத்துவமனை ஊழியர்களும், நோயாளிகளுடன் தங்கி இருந்தவர்களும் உடனடியாக நோயாளிகளை அவசர சிகிச்சை பிரிவு வார்டில் இருந்து வெளியே கொண்டு வந்தனர். நல்ல வாய்ப்பாக நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேல் மாடியில் உள்ள ஆபரேஷன் தியேட்டர் அருகே உள்ள ஏசி எந்திரத்தில் மின் கசிவு காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
தகவல் அறிந்து மருத்துவமனை டீன் மணி மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா உள்ளிட்டூர் தீ விபத்து ஏற்பட்ட பகுதியை ஆய்வு செய்தனர்.