சென்னையில் ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரெயில் தயாராகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 3 வழித்தடங்களில் ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில் 118.9 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெறுகிறது.
இதில் மாதவரம் -சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம்- பூந்தமல்லி புறவழிச்சாலை, மாதவரம்-சோழிங்கநல்லூர் வரை பணிகள் நடந்து வருகின்றன.
2-ம் கட்ட வழித்தடத்தில் டிரைவர் இல்லாமல் இயக்கப்படும் 3 பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ ரெயில்களை (மொத்தம் 108 பெட்டிகள்) வழங்குவதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்திற்கு ரூ.1,215.92 கோடி மதிப்பில் வழங்கப்பட்டு உள்ளது.
Also Read : கொடைக்கானல் வனப்பகுதியில் 300 அடி நீளத்திற்கு நிலத்தில் பிளவு..!!
இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் மெட்ரோ ரெயிலுக்கான பெட்டிகளை உற்பத்தி செய்யும் பணியை அந்த நிறுவனம் ஸ்ரீசிட்டியில் கடந்த 8.2.2024 அன்று தொடங்கியது.
முதல் மெட்ரோ ரெயில் பெட்டிக்கான உற்பத்தியை தொடங்கிய நிலையில் பெட்டியில் உள்ள பல்வேறு உபகரணங்களை பொருத்தும் பணிகள் நடைபெற்றது.
தற்போது அனைத்து பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்து ஓட்டுநர் இல்லாத முதல் மெட்ரோ ரெயில் தயாராகி உள்ளது. இதனை தனியார் நிறுவனம் அதன் சோதனை தடத்திற்கு மாற்றியது.
உற்பத்தி வளாகத்தில் அனைத்து சோதனைகளும் முடிந்த பின்னர் டிரைவர் இல்லாத முதல் மெட்ரோ ரெயில் பூந்தமல்லி பணி மனைக்கு அனுப்பப்படும். இதன் பிறகு 2-ம் கட்ட வழித்தடத்தில் பல்வேறு நிலையில் சோதனை ஓட்டம் நடைபெற்று முறையான ஒப்புதல்களைப் பெற்ற பிறகு ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயில் பயணிகளின் சேவை தொடங்கும் என தகவல் வெளியாகி உள்ளது.