சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதி தொடர்பாக இன்று மாலை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடவுள்ளது.
உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய ஐந்து மாநிலங்களில் வரும் பிப்ரவரி – மார்ச் மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், டெல்லியில் உள்ள விக்யான் பவனில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெறவுள்ளது. அதில் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தேதி குறித்து அறிவிக்கப்படுகிறது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதையொட்டி மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை வல்லுநர்களை இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று முன்தினம் சந்தித்து பேசினர்.

அப்போது வாக்குப்பதிவை ஒட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தடுப்பூசி பயன்பாட்டை விரைவுபடுத்துமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா உடன் தேர்தல் நடைபெறும் ஐந்து மாநிலங்களில் சட்டம், ஒழுங்கு பிரச்சினை தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.