வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களின் கனமழை பெய்து வருகிறது.
நேற்று இரவு முதல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழையால் பாலாற்றில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வரலாறு காணாத வகையில் வாலாஜா அணைக்கட்டு தடுப்பணைக்கு பொன்னை மற்றும் பாலாற்றிலிருந்து நீர்வரத்து அதிகரித்து தற்போது தடுப்பணைக்கு 1,05,000 கன அடி நீர் வருகிறது.
பாலாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோரம் உள்ள சாதம்பாக்கம், திருமலைச்சேரி, பூண்டி, உள்ளிட்ட 30-க்கும் அதிகமான கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் யாரும் பாலாற்று வெள்ளத்தில் குளிக்கவோ அல்லது, ஆற்றினை கடக்க முயற்சி செய்ய வேண்டாம் எனவும் தாழ்வான பகுதிகளில் வசிக்க கூடிய பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் பாலாற்றை ஒட்டி தாழ்வான பகுதியில் உள்ள 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை பாலாற்று வெள்ளம் சூழ்ந்ததுள்ள நிலையில் குடியிருப்புகளில் வசித்து வந்த 1200-க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, விரிஞ்சிபுரம் தரைப்பாலம் மூழ்கியபடி வெள்ளநீா் செல்வதால் தரைப்பாலம் வழியாகப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஐதர்புரம் கிராமத்தில் பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் வீடு ஒன்று அடித்துச் செல்லப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன
வெள்ள நீர் பாலத்தை தாண்டி செலவதால் புதுச்சேரி – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது