தமிழ் நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 680 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, டிசம்பர் 4, 5ம் தேதிகளில் இது வடக்கு வடமேற்கு பகுதியில் நகர்ந்து சென்னைக்கும் மசூலிப்பட்டினத்திற்கும் இடையே 5ஆம் தேதி மாலை புயலாக கரையை கடக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 3, 4-ம் தேதிகளில் தமிழ் நாட்டில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. அந்த வகையில், தென்காசி மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் நேற்று இரவு முதல் கனமழை நீடிக்கிறது. இதனால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு போலீசார் தடை விதித்துள்ளனர்.