நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணைகள் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது. தொடர்மழையால் ஆறுகள், கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. நேற்றும் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் காலை தொடங்கி இரவு முழுவதும் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இதனால் அனைத்து சாலைகளும் வெள்ளக்காடாக மாறியது. மேலும் கூடலூா்- மைசூரு சாலை, உள்ளிட்ட சாலைகளில் பல மரங்கள் வேரோடு முறிந்து விழுந்தது. இதனால் அங்கு பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழை காரணமாக பொன்னானி, மாயாறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் முதுமலை அருகே மசினகுடியில் இருந்து தெப்பக்காடு பகுதியை இணைக்கும் பாலம் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் முழுவதும் மூழ்கியது. இதையடுத்து அந்த வழியாக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழை காரணமாக பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதம் அடைந்தன. கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் சாலையில் நடுவட்டம் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. மண்குவியல், குவியலாக ரோட்டில் கிடந்ததால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு 4 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினா் மற்றும் காவல் துறையினா் மண்ணை அகற்றி போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். தொடா் மழையின் காரணமாக மாவட்டத்தில் உதகை, குந்தா, கூடலூா், பந்தலூா் தாலுகாக்களிலுள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.