மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது தந்தை பெரியார்தான் இதற்குக் காரணம் என்று பிரதமர் வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்(cm mk stalin) கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த வாரத்திலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநிலங்களவையில் தி.மு.க உறுப்பினர் எம்.எம் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசினார்.
அப்போது அவர், ”ஒவ்வொரு இனத்துக்கும் தங்கள் சொந்த விதியை தாங்களே நிர்ணயிக்கும் உரிமை இருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் அது பொருந்தும்’ என சொன்னவர் தந்தை பெரியார்.”என பேசினார்.
இதற்கு நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,எம்.எம். அப்துல்லாவின் இப்பேச்சு அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.இதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்..
மாநிலங்களவையில் தி.மு.க உறுப்பினர் எம்.எம் அப்துல்லா உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்; பெரியாரின் பெயரும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
https://x.com/mkstalin/status/1734221333326860359?s=20
நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது!மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது தந்தை பெரியார்தான் இதற்குக் காரணம் என்று பிரதமர் வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம்!
மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும் – எப்போதும் – எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம்! அனைவரும் பயன்படுத்துங்கள் என்று முதல்வர் பதிவிட்டுள்ளார்.