இந்தியாவில் மத சுதந்திரம் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மத சுதந்திரத்திற்கு எதிரான வன்முறைகளை இந்திய அரசு ஆதரிப்பதாகவும் அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாஜக இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்ததிலிருந்து சிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லை மீறிய வன்முறைகள் தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில்,கடந்த சில நாட்களாக ராம நவமி விழாவை கொண்டாடுவதாக கூறிக்கொண்டு இந்துத்துவவாதிகள் பல்வேறு மாநிலங்களில் உள்ள முஸ்லிம்கள் இருக்கும் பகுதிகளில் சென்று, அவர்களுக்கு எதிராக வன்முறை கோஷங்களும், முஸ்லிம் பெண்களுக்கு எதிரான பாலியல் மிரட்டல்களும் விடுத்து வருகின்றன. ஒரு சில இடங்களில் மசூதிகளில் ஏறி தாக்குதல் நடத்துவதும், தீயிட்டு கொளுத்துவதும், முஸ்லிம்களின் வீடு, கடைகளின் மீது தாக்குதல் நடத்துவது என இந்துத்துவ பயங்கரவாதிகள் பல்வேறு அட்டூழியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக கர்நாடகா, மத்திய பிரதேசம்,உத்தரபிரதேசம்,ராஜஸ்தான், பீகார்,மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இந்துத்துவ பயங்கரவாதிகள் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகளை கட்டவிழ்த்துவிடப்பட்டது.
இந்த நிலையில் தான், இந்தியாவின் மத சுதந்திரம் குறித்து அமெரிக்காவின் சர்வதேச மத சுதந்திர ஆணையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;
”இந்தியாவில் மத சுதந்திரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மத சுதந்திரத்திற்கு எதிரான வன்முறைகளை இந்தியா ஆதரிக்கிறது. தேசிய அளவிலும், மாநில அளவிலும் இந்து தேசிய அரசு அமைக்க வேண்டும் என்ற கொள்கைக்காக சிறுபான்மையினருக்கு விரோதமான சட்டங்களை இந்திய அரசு உருவாக்கியிருக்கிறது” என அந்த அறிக்கையில்தெரிவிக்கப்பட்டுள்ளது.