சென்னையில் இன்றும், நாளையும் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறும் நிலையில், விநாயகர் சிலைகள் பின்வரும் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கரைக்கப்பட அனுமதிக்கப்படுகின்றன என்று ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் கூறி இருப்பதாவது..
ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு உட்பட்ட அனைத்து போலீஸ் நிலைய எல்லைகளில் பல்வேறு இந்து அமைப்புகள், பொதுமக்கள், தனி நபர்கள் சார்பில் மொத்தம் 649 விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டன.
இதில் இன்று கரைக்கப்பட்டது போக மீதமுள்ள 440 சிலைகள் நாளை கரைக்கப்படுகிறது. இந்த விநாயகர் சிலைகள் பின்வரும் குறிப்பிட்ட வழித்தடங்களில் சென்று குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கரைக்கப்பட அனுமதிக்கப்படுகின்றன.
அதன்படி திருநின்றவூர் சந்திப்பில் இருந்து பட்டாபிராம், ஆவடி, திருமுல்லைவாயல், அம்பத்தூர், அம்பத்தூர் எஸ்டேட், கொரட்டூர் ஆகிய பகுதிகளில் இருந்து பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு சென்று கரைக்க வேண்டும்.
திருவேற்காடு திருவேற்காடு பகுதியில் இருந்து வேலப்பன்சாவடி, வானகரம், கோயம்பேடு, வடபழனி, கோடம்பாக்கம், வள்ளுவர் கோட்டம் ஆகிய பகுதிகளின் வழியாக சென்று பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்க வேண்டும்.
நசரத்பேட்டை பகுதியில் இருந்து பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல், போரூர் சந்திப்பு, ஆற்காடு சாலை சென்று பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்க வேண்டும்.
மணலி மார்க்கெட் சந்திப்பில் இருந்து காமராஜர் சாலை, மஞ்சம்பாக்கம், மாதவரம் பஸ் நிலையம், மூலக்கடை, வியாசர்பாடி, மணலி எக்ஸ்பிரஸ் சாலை, எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை, திருவொற்றியூர் உயர் சாலை வழியாக பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு சென்று கரைக்க வேண்டும்.
எண்ணூர் கடற்கரை சி.பி.சி.எல். நிறுவனம் எம்.எப்.எல். சந்திப்பில் இருந்து சத்யமூர்த்தி நகர், எண்ணூர் ஆகிய வழியாக சென்று எண்ணூர் கடற்கரையில் கரைக்க வேண்டும். மீஞ்சூர் ரெயில்வே கேட் பகுதியில் இருந்து அரியன்வயல், திருவாலவயல் காட்டூர், சதாமஞ்சி ஆகிய வழியாக பழவேற்காடு ஏரிக்கு சென்று கரைக்க வேண்டும்.
குமணன்சாவடி பகுதியிலிருந்து மாங்காடு, குன்றத்தூர், அனகாபுத்தூர், பல்லாவரம், மீனம்பாக்கம், தில்லை கங்கா நகர் சுரங்கப்பாதை, வேளச்சேரி, எஸ்.ஆர்.பி. டூல்ஸ் வழியாக நீலாங்கரை கடற்கரைக்கு சென்று கரைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.