கடந்த 22ஆம் தேதி, நாடு முழுவதும் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ சோதனை நடத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் கடந்த 23ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அரசுப் பேருந்துகள், ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதமடைந்தன. ஆர்எஸ்எஸ் அலுவலகங்களிலும் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன.
இந்நிலையில் கேரளாவில் வேலைநிறுத்தத்தின் போது வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 487 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நேற்று வரை 1,992 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 687 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவில் வேலைநிறுத்தம் நடத்துவதாக இருந்தால் 7 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்க வேண்டும் என்றும், திடீர் பந்த் அறிவிக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை மீறி திடீர் பந்த் நடத்தப்பட்டதால் அதிருப்தி அடைந்த கேரள உயர்நீதிமன்றம் இது குறித்து விசாரணை நடத்தியது.
போராட்ட நாளில் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என போலீசாரிடம் கேரள உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதனிடையே, இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஜெயசங்கரன் நம்பியார், முகமது ரியாஸ் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், ”மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வழக்குகளிலும், பி.எப்.ஐ., மாநில பொதுச் செயலாளர் அப்துல் சத்தாரை குற்றவாளியாக சேர்க்க வேண்டும்,” என உத்தரவிட்டது.
மேலும், போராட்டத்தின் போது சேதம் அடைந்த பொதுச் சொத்துகளுக்கான இழப்பீட்டுத் தொகையை போராட்டத்தை அறிவித்த நிர்வாகியிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.