கேரள மாநிலம் திருச்சூரில், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தந்தைக்கு 17 வயது சிறுமி, தன் கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக (donating liver) வழங்கி உள்ளார். இதன் மூலம், இளம் வயதில் உறுப்புதானம் செய்த பெருமையை இவர் பெற்றுள்ளார்.
கேரளாவின் திருச்சூர் பகுதியை சேர்ந்த 48 வயதாகும் பிரதீஷ் என்ற நபர் கணினி மையம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், பிரதீஷ் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எர்ணாகுளம் மாவட்டம், ஆலுவா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
இந்நிலையில், குடும்பத்தின் வறுமை நிலையால் லட்சக்கணக்கில் செலவு செய்து தந்தையை காப்பாற்ற முடியாது என்று உணர்ந்த பிரதீஷின் 17 வயது மகள் நந்து, தனது கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக (donating liver) வழங்க முன்வந்தார்.
ஆனால், சட்டவிதிகளின்படி சிறார் உடல் உறுப்புகளை தானம் செய்ய முடியாது என்ற போதிலும், உயர் நீதிமன்றத்தில் நந்து மனு தாக்கல் செய்து சிறப்பு அனுமதியும் பெற்றார். பின்னர், நந்துவுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்கு கல்லீரலில் கொழுப்பு படிந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனால், தந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்று துடித்த நந்து தனது உணவுப் பழக்கத்தை முழுமையாக மாற்றியதோடு அருகில் உள்ள உடற்பயிற்சிக் கூடத்துக்கு தினமும் சென்று மிகக் கடுமையாக உடற்பயிற்சிகளை செய்து ஒரு மாதத்துக்குள் அவரது கல்லீரலில் படிந்திருந்த கொழுப்பு கறையும்படி செய்தார்.
இதனையடுத்து, கடந்த 9-ம் தேதி சிறுமி நந்துவின் கல்லீரலில் ஒரு பகுதியை எடுத்து அவரது தந்தை பிரதீஷுக்கு மருத்துவர்கள் பொருத்தினர். தற்போது, அறுவைச்சிகிச்சைக்குப் பிறகு தந்தையும் மகளும் உடல் நலம் தேறி வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.