தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது..
“தேசிய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் (SGFI) சார்பில் நடத்தப்படும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க தேர்வாகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட வேண்டிய உதவித்தொகை தற்போதுவரை வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
ஏற்கனவே, கடந்த ஆண்டு பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியப் போக்கால் தேசிய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் நடத்திய விளையாட்டுப் போட்டிகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்க இயலாமல் போன நிலையில், நடப்பாண்டிலும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும், வீரர் வீராங்கனைகளுக்கான உதவித் தொகையை வழங்காமல் காலம் தாழ்த்துவது கடும் கண்டனத்திற்குரியது.
தேசிய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் நடத்தும் பல்வேறு விதமான விளையாட்டுப் போட்டிகள் அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், தற்போது வரை ஊக்கத் தொகை வழங்கப்படாத காரணத்தினால், போக்குவரத்து, உணவு என அனைத்துவிதமான செலவுகளுக்கும் மாணவர்களிடமே தொகையை வசூலித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
மக்கள் வரிப்பணத்தில் பல கோடி ரூபாய் செலவு செய்து தனியார் நிறுவனத்தின் கார் பந்தயத்தினை நடத்துவதற்கும், விளம்பரத்திற்காக வீண் செலவு செய்வதற்கும் நிதி ஒதுக்கும் திமுக அரசு, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒதுக்கப்படும் தொகையை கூட உரிய நேரத்தில் வழங்க மறுப்பது ஏன்? என உடற்கல்வி ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, இனியும் அலட்சியப் போக்குடன் செயல்படாமல் தேசிய அளவிலான போட்டிகளில் தேர்வாகியிருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு வழங்க வேண்டிய ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார் .