மதுரை அருகே அரசு பேருந்து ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற போது திடீரென பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் அதனை ஓட்டி வந்த ஓட்டுநர் உயிர் தப்பிக்க பேருந்தில் இருந்து குதித்ததால் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த தங்கபாண்டியன் எனும் 43 வயது நபர், அரசு பேருந்து ஓட்டுனராக பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில், இன்று தங்கபாண்டியன் மதுரையிலிருந்து உசிலம்பட்டிக்கு அரசு பேருந்தை இயக்கி வந்துள்ளார். அந்த பேருந்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
அப்போது பேருந்து கொண்டமநாயக்கன்பட்டி எனும் ஊர் அருகே ஒரு பாலத்தை கடக்கும்போது நிலை தடுமாறி உள்ளது. இதனால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததை உணர்ந்த ஓட்டுநர் தங்கபாண்டியன் உயிர் பிழைக்க வேண்டி திடீரென பேருந்தில் இருந்து வெளியே குதித்துள்ளார்.
இதனால், தலையில் பலத்த அடிபட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். ஆனால், நல்வாய்ப்பாக அந்த பேருந்து அருகில் உள்ள முள்வேலி, மரம் ஆகிவற்றின் மீது மோதி நின்றது.
அதன் காரணமாக பேருந்தில் பயணித்த 30க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு எந்த வித பெரிய அடியும் காயமும் ஏற்படவில்லை.
இதனை அடுத்து அந்த பேருந்தின் நடத்துனர் வினோத்குமார் என்ற நபர் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதையடுத்து, இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.