பட்டுச் சேலை மற்றும் அதை தயாரிக்க தேவையான மூலப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்வதால், கைத்தறி சங்கங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
நாடு முழுதும் ஜவுளி பொருட்களின் மீது விதிக்கப்படும் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி 5 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக உயர்கிறது. இந்த வரி உயர்வு ஜனவரி 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
ஒட்டு மொத்த ஜவுளி துறையின் கீழ் பட்டு கைத்தறி நெசவும் வருவதால் ஜிஎஸ்டி உயர்வு வாயிலாக பட்டுச் சேலைகளின் விலை கணிசமாக உயர உள்ளது.
சாதாரண பட்டுச் சேலையின் விலையும் 3,௦௦௦ ரூபாய் வரை உயரும் என்பதால், பட்டு மற்றும் பருத்தி ஆடைகளை கைத்தறியில் நெய்யும் நெசவாளர்கள் பாதிக்கப்படுவர் என கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் குரல் எழுப்பி வருகின்றன.
கைவினை பொருட்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு உள்ளது. அந்த வகையிலேயே கைத்தறியில் நெய்யப்படும் பட்டுச் சேலைகளும் வருவதால் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.