குஜராத்தில்(gujarat) அரசு நிலத்தில் கட்டப்பட்ட தர்காவை அகற்ற முயற்சித்த போது காவல் துறையினருடன் ஏற்பட்ட பயங்கர மோதலில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குஜராத் மாநிலம் ஜூனாகத் நகர் கோட்டைக்குள் தர்கா இருப்பது போன்ற கட்டமைப்பைக் கொண்டது. இதன் மஜேவாதி கேட் பகுதியில் இந்த தர்கா அமைந்துள்ளது. இது அரசு நிலத்தில் கட்டப்பட்டது என குற்றச்சாட்டு எழுப்பபட்டது.
உண்மையில் என்ன நடந்தது?
இந்த நிலையில் ஜூனாகத்தில் உள்ள மஜேவாடி கேட் எதிரில் உள்ள தர்கா அனுமதியற்றது என நகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அந்த இடத்தின் உரிமை குறித்த ஆவணங்களை சமர்ப்பிக்கவும், இல்லையெனில் தர்கா அகற்றப்படும் என மாநகராட்சி நோட்டீசில் கூறியிருந்தது.
இதற்கு ஐந்து நாட்கள் கெடு விதிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை தர்காவுக்கு வெளியே ஒட்டுவதற்காக நகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை வந்தபோது, திடீரென 200 முதல் 300 பேர் வரை திரண்டனர். கோஷங்கள் எழுப்பி கற்களை வீசத் தொடங்கினர்.
இதில் துணை காவல்துறை உயர்அதிகாரி உள்பட 4 போலீசார் காயம் அடைந்தனர். மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இதுகுறித்து, காவல்துறை சூப்பிரண்டு ரவிதேஜா வாசம்செட்டி கூறுகையில், “மஜேவாடி கேட் அருகே உள்ள தர்காவுக்கு 5 நாட்களுக்குள் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது. வெள்ளிக்கிழமை திடீரென 500 முதல் 600 பேர் அங்கு திரண்டனர்.
காவல்துறையினர் கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆனால், இரவு 10.15 மணியளவில் அந்த கும்பல் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மீது கற்களை வீசி தாக்கியது.
மேலும் கூட்டத்தை கலைக்க தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.இந்த சம்பவத்தில் 174 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.மேலும் காவல்துறையினர் சாவடியை அடித்து நொறுக்கிய கும்பல், வாகனங்களுக்கு தீ வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்று காவல்துறை உயரதிகாரி ரவி தேஜா தெரிவித்தார்.