மருத்துவர் ஒருவர் மாட்டு சாணத்தை சாப்பிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மாட்டு கோமியத்தை குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்றும், கொரோனா வைரஸில் இருந்து குணமடையலாம் என்றும் பல்வேறு வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்ற நிலையில், இதனை எதிர்த்து பல்வேறு மருத்துவர்களும் மக்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் மருத்துவர் ஒருவர் மாட்டு சாணத்தை எடுத்து ருசித்து சாப்பிடும் வீடியோ ஒன்று சvமூக வலைத்தளத்தில் தற்போது வெளியாகி வருகிறது.
அதில் தன்னை அரியானாவில் கர்னல் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் என்றும் தனது பெயர் மனோஜ் மிட்டல் என்றும் அறிமுகப்படுத்திக் கொள்ளும் அந்த நபர், தரையில் இருந்த மாட்டு சாணத்தை எடுத்து ருசித்து சாப்பிடுகிறார்.
அதன் பின்பு மாட்டு சாணத்தை சாப்பிடுவதாலும் , பசுவின் சிறுநீரைக் குடிப்பதாலும் என்னென்ன வியாதிகள் தீரும் எனவும் பட்டியலிடுகிறார் அந்த நபர்.
மாட்டு சாணத்தை சாப்பிடுவதாலும், மாட்டின் கோமியத்தை பருகுவதாலும் நமது உடலில் ஏற்படும் பல கடுமையான நோய்களைத் தடுக்க உதவுகின்றன என்றும் பெண்கள் சுக பிரசவமடைய பசுவின் சாணத்தை உண்ண வேண்டும், பசுவின் சாணத்தை சாப்பிட்டால் நம் உடலும் மனமும் தூய்மையாகும் என்றும் அந்த மருத்துவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஒரு மருத்துவரே இது போன்ற செயல்களில் ஈடுபடுவது குறித்து பலரும் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.