அமெரிக்கா அதிபருக்கான முழு அதிகாரத்துடன் முதல் பெண் அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தற்காலிகமாக 1 மணி நேரம் 25 நிமிடங்கள் பதவி வகித்தார்.
அமெரிக்கா அதிபராக, தற்போது ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் பதவி வகித்து வருகிறார். அமெரிக்காவின் துணை அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் பதவி வகிக்கிறார்.
இந்நிலையில் மருத்துவப் பரிசோதனைக்காக, அதிபர் ஜோ பைடன் திடீரென வாஷிங்டனில் உள்ள வால்டர் ரீட் மருத்துவ மையத்தில் நேற்று அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கு அவருக்கு பெருங்குடல் தொடர்பாக சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சிகிச்சையிலிருந்து குணமடையும் வரை தனது அதிபருக்குள்ள அதிகாரத்தை துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு தற்காலிகமாக வழங்கி அமெரிக்க அதிபர் பைடன் உத்தரவிட்டிருந்தார்.
பின்னர் சிகிச்சையிலிருந்து ஜோ பைடன் குணமடைந்தாகவும், அதுவரை ஒரு மணி நேரம் 25 நிமிடங்கள் தற்காலிக அமெரிக்க அதிபராக கமலா ஹாரிஸ் பதவி வகித்தார் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா அதிபருக்கான முழு அதிகாரத்துடன் முதல் பெண் அதிபராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தற்காலிகமாக 1 மணி நேரம் 25 நிமிடங்கள் பதவி வகித்ததன் மூலம் இது போன்று பதவி வகித்த முதல் பெண்மணி என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.