தமிழ்நாட்டின் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் டிசம்பர் முதல் வாரத்தில் பெய்த கனமழையை தொடர்ந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கடந்த 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் இயல்பைவிட அதிக அளவு மழை பெய்ததது.
அதன்பின்னர் கடந்த ஒரு வாரமாக மழை சற்று குறைந்து காணப்பட்ட நிலையில் தென் மாவட்டங்களில் நேற்று ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது.
இந்த நிலையில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தென் மாவட்டங்களில் சில இடங்களில் நாளை முதல் மீண்டும் மழை ஆரம்பிக்க இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
இன்று (29-12-2023) தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை மறுதினமும் அதற்கு அடுத்த நாளும் தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
நாளை, நாளை மறுதினம் மற்றும் 1-ந்தேதிகளில் குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய மன்னார் வளைகுடா, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வரையிலான வேகத்தில் வீசக்கூடும்” என்று வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் கூறியுள்ளது.