சென்னை: வெப்பச்சலனம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உட்பட 5 மாவட்டங்களுக்கு, வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது….
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக மழை தரக்கூடிய அடர்ந்த மேகமூட்டங்கள் உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
எனவே, இந்த 5 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், நிர்வாக ரீதியாக தயார் நிலையில் இருக்க வேண்டியதை உணர்த்தும் மஞ்சள் நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
சென்னையில் கருமேகம் சூழ்ந்து இரவு போல காட்சி அளித்து பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம்,வடபழனி, அண்ணாநகர்,எழும்பூர், ஆவடி, திருமுல்லைவாயில், பட்டாபிராம், கோவர்த்தகிரி, பருத்திப்பட்டு, அசோக் நகர், மாம்பலம், செங்குன்றம், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததுள்ளது.
மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்தில் உள்ளனர், அதே நேரத்தில் தேங்கி இருக்கும் மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே, ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.