தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மைய ஆய்வு இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்
சென்னை வானிலை ஆய்வு மையத்தில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் என்று தெரிவித்தார்.
மேலும் தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் ஏனைய மாவட்டங்களில் பெருமபாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என்றும் புவியரசன் தெரிவித்துள்ளார்.
இதே வேலை நாளை நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெருமபாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் நகரின் பெருமபாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 24 மணி நேரத்தில் சத்தியமங்கலத்தில் 8 செ.மீ. மழையும் சித்தாரில் 7 செ.மீ மழையும் பேச்சிப்பாறை மற்றும் எமெரால்ட்சில் தலா 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழக கடற்கரை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்ற அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும் என்றும் ராஜஸ்தான் பகுதிகளிலிருந்து தென்மேற்கு பருவமழை விலக தொடங்குவதால் அங்கு ஓரிரு நாளில் வடகிழக்கு பருவமழை தொடங்க சாத்திய கூறுகள் உள்ளது என்று தெரிவித்த சென்னை வானிலை மைய ஆய்வு இயக்குநர் புவியரசன் அதனை தொடர்ந்து மற்ற பகுதிகளிளும் தொடங்கும் என்றும் இது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.