தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழையும், 5 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைப்பதும் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமானது முதல் கனமழை என இருந்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணாக தமிழகத்தில் 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ள என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன் படி தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில், அதாவது மதியம் 1 மணியளவில் 6 மாவட்டங்களில் இடி,மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் லேசான மழையும், சிவகங்கை, ராமநாதபுதம், நாகை, திருவாரூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்” என கூறியுள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.