குஜராத்திலிருந்து ரூ.120 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை கடத்த முயன்றவர்கள் 6 பேரை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் (என்சிபி) ரூ.120 கோடி மதிப்புடைய சுமார் 60 கிலோ மெபெட்ரோன் போதைபொருளை கைபற்றியுள்ளதாகவும், இதன்மூலம் மாநிலங்களுக்கு இடையில் நடக்க இருந்த மாபெரும் போதைப்பொருள் கடத்தல் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறும்போது;
“ஜாம்நகரில் உள்ள கடற்படை புலனாய்வுப் பிரிவினர் கொடுத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக ஏர் இந்தியாவின் முன்னாள் விமானி உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் சோஹாலி காஃப்பர் என்பவர் அமெரிக்காவில் விமானம் ஓட்ட பயிற்சி பெற்று, கடந்த 2016 – 2018 வரை ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்துள்ளார். இவருடன் முத்து பிச்சைதாஸ், எஸ்எம் சவுத்ரி, எம்.ஐ.அலி, எம்.எஃப்.சிஸ்டி ஆகியோர் மும்பையிலும், பாஸ்கர் என்பவர் குஜராத்தின் ஜாம்நகர் பகுதியிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதில், பிச்சைதாஸ் என்பவர் கடந்த 2001-ம் ஆண்டு வருவாய்த் துறை இயக்குநரகத்தால் மற்றொரு போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தார். அவர், 2008-ம் ஆண்டில் ஜாமீனில் வெளியே வந்தார்.
குஜராத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு மெபெட்ரோன் போதைப்பொருள் கடத்தப்பட இருப்பதாக கிடைத்த தகவலின்படி, கடத்தப்பட இருந்த 10.35 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து பாஸ்கர், மஹிந்தா, சவுத்ரி, பிச்சைதாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் அக்.3-ம் தேதி நடந்தது. இவரிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், அலி மற்றும் சிஸ்டி ஆகிய இருவரும் தெற்கு மும்பையில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 50 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது” என்று அவர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் குஜராத் மாநிலத்தில் பெரிய அளவில் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டன. ஆகஸ்ட் மாதம் வதோதராவில் 200 கிலோ மெபெட்ரோன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. செப்டம்பர் மாதம் மிகப் பெரிய அளவில் ரூ.21,000 கோடி மதிப்புள்ள 3000 கிலோ போதைப்பொருள் முந்த்ரா துறைமுகப் பகுதியில் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.