தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பிய பிஹார் யூடியூபர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிஹாரைச் சேர்ந்த யூடியூபர் மனிஷ்காஷ்யப். இவர் தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டார். இதனால் தமிழகம், பிஹாரில் பதற்றமான சூழல் உருவானது. பிஹார் அதிகாரிகள் தமிழகத்துக்கு நேரில் வந்து ஆய்வு நடத்தினர்.
இந்நிலையில், தமிழகத்தில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பியதாக மனிஷ் காஷ்யப் மீது மதுரை சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் மனிஷ்காஷ்யப் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், மனிஷ் காஷ்யப் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி அவரது சகோதரர் திரிபுவன் குமார் திவாரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஆள்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
அதில், ‘என் சகோதரர் மனிஷ் காஷ்யப் 2018 முதல் தனி யூடியூப் சேனல் நடத்தி பிஹார் மக்களின் பிரச்சினைகளை வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். தமிழகத்தில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வீடியோவை வெளியிட்டதாக மனிஷ் காஷ்யப்பை பிஹார் போலீஸார் கைது செய்து தமிழக போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் அவரை மதுரை போலீஸார் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தனர். அவர் மதுரை மத்திய சிறையில் 4 மாதங்களாக அடைக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட 5 நாளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அவர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்து, ”மனுதாரரின் சகோதரர் எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்யப்படுகிறது. மனிஷ் காஷ்யப் மீதான வழக்கை போலீஸார் விசாரிக்கலாம்” என உத்தரவிட்டனர்.