இமாச்சலப் பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் உள்ள அன்னி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், ஏராளமான கட்டிடங்கள் சரிந்து விழும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாவட்டம் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் நிலச்சரிவுகள், மேக வெடிப்புகள் மற்றும் திடீர் வெள்ளம் என மாநிலம் முழுவதும் இயற்கை பேரிடரை எதிர்கொண்டுள்ளது.

குறிப்பாக சிம்லா மாநிலத்தில் ஒரே இரவில் பெய்த கனமழையால் 12 பேர் உயிரிழந்ததாகவும், 400க்கும் மேற்பட்ட சாலைகள் போக்குவரத்து தடைபட்டது. மேலும் பல வீடுகள் இடிந்து விழுந்தது.இதனால் பலர் அச்சத்தில் வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஜூன் 24-ம் தேதி முதல் இமாச்சல் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 227 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இந்த நிலையில்,குலு மாவட்டத்தில் உள்ள அன்னி பகுதியில் பல கட்டிடங்கள் இடிந்து விழும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.அதில் 9 கட்டிடங்கள் அடுத்தடுத்து சீட்டுக்கட்டு போல் சரிந்து விழுந்தது.இந்த கோர விபத்தில் உயிர்சேதம் எதுவும் நிகழவில்லை என கூறப்படுகிறது.
வரலாறு காணாத அதிகனமழையால், நிலச்சரிவு மற்றும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இமாச்சல பிரதேசத்தில் 2 நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் ,காங்ரா, குலு, மண்டி, சிம்லா, சோலன் மற்றும் சிர்மௌர் மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும் சிம்லா, சிர்மௌர், காங்க்ரா, சம்பா, மண்டி, ஹமிர்பூர், சோலன், பிலாஸ்பூர் மற்றும் குலு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.