இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி நள்ளிரவு 12 மணி அளவில், பண்டித ஜவஹர்லால் நேருவின் கரங்களில் ஒப்படைக்கப்பட்ட தமிழ் செங்கோலை உருவாக்கியது யார் என்பது குறித்த புதிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆங்கிலேயர்களிடமிருந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக வழங்கப்பட்ட இந்த தங்க முலாம் பூசப்பட்ட தமிழ் செங்கோலை பிரபல நகை தயாரிப்பு நிறுவனமான சென்னையில் உள்ள உம்மிடி பங்காரு செட்டி நிறுவனம்தான் இந்த அழகிய செங்கோலை தயாரித்துள்ளது.
தற்போது 96 வயதாகும் உம்மிடி எத்திராஜுலு(இடது புறம் உள்ளவர்) இந்த பழைய நினைவுகளை நினைவு கூறுகிறார். யாரோ ஒரு முக்கிய பிரமுகரின் பரிந்துரையின் பெயரில் திருவாவடுதுறை ஆதீனம் தம்மை அணுகியதாகவும், ஒரு ஓவிய வடிவத்தை நம்மிடம் அவர்கள் காட்டியதாகவும் உம்மிடி எத்திராஜுலு தெரிவித்துள்ளார். மேல் பக்கம் உருண்டை வடிவில், நீண்ட செங்கோல் அந்த ஓவியத்தில் வரையப்பட்டிருந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
சிவபெருமானின் ஆசியுடன் உருவாக்கப்படும் இந்த செங்கோல் மிக முக்கியமான இடத்திற்கு செல்கிறது என்றும் அதனை மிகவும் கவனத்துடனும், நல்ல தரத்துடனும் வடிவமைக்க வேண்டும் என்றும் அவர்கள் நம்மிடம் கேட்டுக் கொண்டதாகவும் உம்மிடி எத்திராஜுலு தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் வெள்ளி மற்றும் தங்கம் முலாம் பூசப்பட்டு அந்த அழகிய செங்கோல் உருவாக்கப்பட்டதாகவும் உம்மிடி எத்திராஜுலு தனது பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து உள்ளார்.
இந்த அரிய தகவல்களை பிரபல எழுத்தாளர் மற்றும் வழக்கறிஞர் கே எஸ் ராதாகிருஷ்ணன் வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.