தமிழகத்தில் காய்கறிகளின் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முதல்வர் வழிகாட்டுதல் அடிப்படையில் தமிழகம் முழுவதும் தினசரி தேவைக்கான காய்கறிகளை பசுமை பண்ணைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் செய்த கனமழை காரணமாக காய்கறி வரத்து குறைந்தது. இதனால் காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக தக்காளியில் விலை கிலோ ரூ 180 முதல் 200 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதனை கட்டுப்படுத்தும் வகையில் கூட்டுறவுத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அறிவித்துள்ளது.
இது குறித்து செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் காய்கறிகளின் வரத்து குறைந்து, விலை உயர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக முதல்வர் வழிகாட்டுதல் அடிப்படையில் தமிழகம் முழுவதும் தினசரி தேவைக்கான காய்கறிகளை பசுமை பண்ணைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டியுசிஎஸ், சிந்தாமணி கூட்டுறவு நிறுவனங்களால் காய்கறிகள் கொள்முதல் செய்யப்படும். பின் நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் காய்கறி கடைகள் மூலம் விற்பனை செய்யப்படும்.
சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, மதுரை, திருவண்ணாமலை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருப்பூர், சேலம், ஈரோடு, வேலூர் மாவட்டங்களில் அனைத்து காய்கறிகளும் விற்பனை செய்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் தக்காளி விலை கிலோ ரூ.85 முதல் ரூ.100 வரை குறைவான விலையில் விற்பனை செய்யப்படும். இந்த அரிய வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.