தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான சங்கரய்யாவை கவுரப்படுத்தும் வகையில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் மூலம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
சுதந்திரப் போராட்டத் தியாகியும் மிகச் சிறந்த பொதுவுடமைத் தலைவராகவும் திகழும் நம் மரியாதைக்குரிய திரு.சங்கரய்யா அவர்களுக்கு தமிழ்நாடு அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு “தகைசால் தமிழர்” என்ற விருதினை வழங்கி கவுரவித்தது.
102 வது பிறந்த நாள் காணும் பெரியவர் திரு.சங்கரய்யா அவர்கள் மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயின்ற பொழுது ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் காரணமாக அவர் கல்லூரித் தேர்வினை எழுத முடியவில்லை.
இந்தியா விடுதலை பெறுவதற்கு 12 மணி நேரங்களுக்கு முன்பாக தான் 1947-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதியன்று அவர் விடுதலை செய்யப்பட்டார் என்பது வரலாறு.
ஏழை எளிய மக்களுக்காக தம் வாழ்நாளை அர்ப்பணித்தவரும் தமிழினத்தின் வளர்ச்சிக்காக உழைத்தவரும் ஒரு மிகச் சிறந்த சுதந்திரப் போராட்டத் தியாகியுமான திரு சங்கரய்யா அவர்களுக்குச் சிறப்பு சேர்க்கும் வகையில் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலும் இருந்து கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன.
இதையடுத்து மரியாதைக்குரிய திரு.சங்கரய்யா அவர்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சார்பாக கவுரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கு ஆவன செய்யப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.