அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்..
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (13.09.23 முதல் 17.09.23) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும், மியான்மர் கடற்கரையை ஒட்டியுள்ள கிழக்கு மத்திய வங்கக் கடலில் சராசரி கடல் மட்டத்திலிருந்து 3.1 கிமீ மற்றும் 7.6 கிமீ உயரத்தில் உருவாகியுள்ள சூறாவளி சுழற்சியானது தென்மேற்கு திசையில் சாய்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, மகாராஷ்டிராவை நோக்கி நகர்ந்து, ஆந்திரா, ஒடிசா, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் மழை தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த பருவமழை செப்டம்பர் இறுதி வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் மற்றும் வடகிழக்குப் பகுதிகளிலும் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.