அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கில் ஒருபுறம் ஜாமீன் கோரி செந்தில்பாலாஜி தரப்பினர் நீதிமன்ற கதவுகளை தட்டி வரும் நிலையில், மறுபுறம் ஜாமீன் கிடைக்காமல் போவதற்கான தரவுகளை தன் பங்கிற்கு தனது குற்றப்பத்திரிக்கை மூலம் அடுக்கி வருகிறது அமலாக்கத்துறை.
அவ்வகையில் போக்குவரத்துத் துறையில் பல்வேறு பணிக்கான நேர்முகத் தேர்வில், பணம் கொடுத்தவர்களுக்கு பென்சிலால் மார்க் செய்யப்பட்டு, மதிப்பெண்கள் மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கிக் கொடுக்க பணம் பெற்ற வழக்கில், செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையில் செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி லஞ்சம் பெற்றுக் கொண்டு சட்ட விரோதமாக பல்வேறு குற்றங்களை மேற்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் லஞ்சமாக பெறப்பட்ட பணத்தை குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் வங்கி கணக்குகளில் சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், வேலைக்காக பெறப்பட்ட பணம் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சண்முகம் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டதும், வேலை தொடர்பாக, சுமார் 1 கோடியே 34 லட்சம் ரூபாய் செந்தில் பாலாஜியின் வங்கிக் கணக்கில் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவரது மனைவி மேகலா 29 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்டதும் தெரியவந்துள்ளதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
மறுபுறம் நேர்காணலை சந்தித்த பல்வேறு நபர்கள் வேலை பெறுவதற்காக செந்தில் பாலாஜியின் கூட்டாளிகளை அணுகியது அடுத்தடுத்த விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், நேர்காணலில் பென்சிலால் மதிப்பெண்கள் போடப்பட்டதும், வேலைக்காக பணம் கொடுத்தவர்களுக்கு மட்டும் மதிப்பெண்கள் மாற்றப்பட்டு பணி ஆணை வழங்கப்பட்டதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறையின் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தரவுகளின் தாக்கத்தை எதிர்வரும் வழக்குகளின் விசாரணைகளில் பார்க்கலாம்.