இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது. முன்னதாக இந்திய அணியுடனான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி இழந்து தொடர் தோல்வியை தழுவியது. அதன் பின்னர் தொடங்கிய 20 தொடரில் முதல் போட்டியில் ஆபரமாக விளையாடி வென்றது. இரண்டாவது போட்டியில் வெறும் 100 ரன்கள் மட்டுமே இலக்காக கொடுத்தது நியூசிலாந்து.
ஆனாலும் அந்த போட்டியில் வெற்றி இலக்கான 100 ரன்களை அடைவதற்கு இந்திய வீரர்கள் பெரும் போராட்டத்தை சந்திக்க நேர்ந்தது. மைதானத்தின் தன்மை மாறுபாடு காரணமாக சுழல் பந்து வீச்சு சாதகமானதால், இந்திய வீரர்களை நியூசிலாந்து சுழல் பந்து பதம்பார்த்தது. இருப்பினும் இறுதி பந்து வரை போராடி வெற்றி பெற்றது இந்தியா. சுவாரஸ்ய நிகழ்வாக இந்த போட்டியில் இரு அணிகளும் ஒரு சிக்சர்கள் கூட அடிக்கவில்லை.
3 போட்டிகள் கொண்ட தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளனர். தொடரை தீர்மானிக்கும் இறுதி போட்டி இன்று இரவு நடைபெறவுள்ளது. ஒருநாள் தொடரை இழந்தாலும், 20 ஓவர் தொடரை வென்று வெற்றியுடன் நாடு திரும்பும் முனைப்பில் உள்ளது நியூசிலாந்து. முற்றிலுமாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரை கைபற்றும் நோக்கிலுள்ளது இந்தியா.
இந்திய வீரர்களுக்கு கடும் சவால் அளிக்கும் விதமாக நியூசிலாந்து பந்து வீச்சு அமைத்துள்ளதால், இந்த போட்டியில் யார் வெற்றி பெறபோகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.