ஜி20 மாநாட்டில் பிரதமரின் நாட்டை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள பலகையில், இந்தியாவுக்கு பதிலாக ‘பாரத்’ என குறிப்பிடப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜி 20 நாடுகளின் 18 ஆவது உச்சிமாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்துகிறது. இந்த மாநாடு டெல்லியில் இன்றும் நாளையம் நடைபெறவுள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர், ஜப்பான் பிரதமர் உள்ளிட்ட உலகின் பல தலைவர்கள் சந்தித்து பேச உள்ளனர். இதில் சீனா மற்றும் ரஷ்ய அதிபர்கள் மாநாட்டில் பங்கேற்காதது சர்வதேச அரசியலில் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
இந்த நிலையில் ஜி20 மாநாட்டில் பிரதமரின் நாட்டை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள பலகையில், இந்தியாவுக்கு பதிலாக ‘பாரத்’ என்ற பெயர் இடம் பெற்றுள்ளது.
டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய தலைவர்களுக்காக குடியரசு தலைவர் மாளிகையில் விருந்து வழங்கும் அழைப்பிதழில் இந்திய குடியரசுத் தலைவர் என்பதற்கு பதிலாக பாரத குடியரசு தலைவர் என அச்சிடப்பட்டு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. மத்திய அரசின் இந்த பெயர் மாற்ற முயற்சி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் தெரிவித்து வந்த நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பேசிய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர், நாட்டின் பெயரை இந்தியா என்பதற்குப் பதிலாக பாரத் என மாற்றும் மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியானது குறித்து இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் இன்று ஜி20 மாநாட்டில் பிரதமரின் நாட்டை குறிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள பலகையில், இந்தியாவுக்கு பதிலாக ‘பாரத்’ என குறிப்பிடப்பட்டுள்ளது மீண்டும் சலசலப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
முன்னதாக,2024 நாடாளுமன்றத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் ,திமுக, உள்ளிட்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்து தங்கள் அணிக்கு INDIA என பெயர் சூட்டிய பின்னர் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பாரத் என்ற சொல்லை பயன்படுத்த தொடங்கி வருவது குறிப்பிடதக்கது.