புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை பைரவர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வழிபாடு நடத்தவுள்ளார்.மேலும் இந்த கோவிலின் சிறப்பு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
2024 ஆம் ஆண்டுக்கான சிவகங்கை லோக்சபா தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சிவகங்கை பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவை ஆதரித்து வாகன பேரணி செய்வதாகவம், திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் – அருள்மிகு ராஜராஜேஸ்வரி உடனுரை சத்யவாகீஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்வதாகவும் அறிவிக்கப்பட்டது.
ஆனால் அன்றைய தினம் திருமயம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் மழை பெய்தது.இதனால் மதுரையில் இருந்து அமித்ஷா செல்லும் ஹெலிகாப்டர் திருமயத்தில் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் அமித்ஷாவின் சாமி தரிசனம் மற்றும் அங்கு நடைபெற இருந்த வாகன பேரணி ஆகியவை ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில் திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வந்துள்ள அவர் ,மதுரை விமான நிலையத்துக்கு வந்திறங்கி அங்கிருந்து திருமயம் கோட்டை பைரவர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்ய உள்ளார்.
இதையும் படிங்க: ‘நாளை மறுநாள் தமிழகம் வரும் அமித்ஷா.. ”வேண்டுதல் நிறைவேறுமா?
திருமயம் கோட்டை பைரவர் கோயில் சிறப்பு :
புதுக்கோட்டையிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள திருமயம் என்னும் ஊரில் அமைந்துள்ளது கோட்டை பைரவர் கோவில். இக்கோவில் 350 ஆண்டுகள் பழமையான திருமயம் கோட்டையின் வடபுற சுவற்றில் அமைந்துள்ளது.
இந்தக் கோட்டையை இவர் பாதுகாப்பதால் கோட்டை பைரவர் என அழைக்கப்படுகிறார். தமிழகத்திலே வடக்கு பார்த்தபடி, தனிக் கோவில் கொண்டருளும் பைரவர் தலம் இது ஒன்றே ஆகும்.
மேலும், கோவிலின் முன்புறச் சாலையில் செல்லும் வாகனங்களுக்குப் பாதுகாப்பு தரும் கண்கண்ட தெய்வமாகக் கோட்டை பைரவர் விளங்குகிறார்.
சகல தோஷ பரிகாரத் தலமாகவும் இது விளங்குகிறது. கோட்டை பைரவர் கால பைரவ அம்சம் ஆவார். இக்கோவில், விசாகம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிறப்புத் தலம் ஆகும்.
அஷ்டமச்சனி, ஏழரைச்சனி மற்றும் சகல சனி சம்பந்தப்பட்ட தோஷங்களும் இப்பைரவருக்கு அபிஷேகம், வடைமாலை, சந்தனக்காப்பு செய்து, நெய்தீபம், மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் சனிதோஷம் விலகும்.
பிதுர் தோஷங்களுக்குப் பைரவருக்கு புனுகு சாற்றி, எழுமிச்சம்பழ மாலை சூட்டி, எள் சாத அபிஷேகம் செய்து வழிபட்டால் பிதுர் தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.
செவ்வாய்க்கிழமைகளில் மரிக்கொழுந்து மாலை அணிவித்து, புனுகு பூசி, நெய்தீபம் ஏற்றி வந்தால் கல்வியில் மேன்மை பெறலாம்.
இப்பைரவருக்கு சந்தனாதித் தைலம் சாற்றி அபிஷேகம், செய்து சந்தனக்காப்பு, வடைமாலை சாற்றி வழிபட்டால் வியாபாரம், தொழில் அபிவிருத்தி ஏற்படும்.
செவ்வாய்க்கிழமைகளில் ராகு காலத்தில் செவ்வரளி மாலை, நெய்தீபம் ஏற்றி ஏழுவாரம் தொடர்ந்து செய்து வந்தால் சகோதர ஒற்றுமை ஏற்படும்.
எல்லாப் பரிகாரங்களுக்கும் நெய் தீபமும், மிளகு தீபமும் பொதுவானது. இவரைத் தேய்பிறை அஷ்டமி அன்று வழிபட்டால், நன்மை கோடி வந்து சேரும் என்பது ஐதீகம்.
கோட்டை பைரவர் கோவிலின் தனிச்சிறப்பு பைரவர் சிலை இருக்கும் திசையாகும். பெரும்பாலான சிவன் கோவில்களில், பைரவர் சிலைகள் பொதுவாக மேற்கு நோக்கி இருக்கும்.
இருப்பினும், கோட்டை பைரவர் சிலை வடக்கு நோக்கி உள்ளது தான் இந்தக் கோவிலின் சிறப்பாகும்.