உத்தரகாண்ட்(uttarakhand) சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களிடம் தொலைபேசியில் பிரதமர் மோடி பேசினார்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் இருக்கும் சில்க்யாரா சுரங்கப்பாதை கட்டுமானத்தின்போது கடந்த நவம்பர் 12ஆம் தேதி சுரங்கப்பாதையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அப்போது சுரங்கப்பாதைக்குள் பணியில் இருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.
கிட்டத்தட்ட 17 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு சிக்கித் தவித்த 41 தொழிலாளர்களும் நேற்று இரவு வெற்றிகரமாக மீட்கப்பட்டனர்.கடும் சவால்களை கடந்து தொழிலாளர்களை பாதுகாப்பாக மீட்ட மீட்புக் குழுவினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.மேலும், 41 தொழிலாளர்களை மீட்ட மீட்புக் குழுவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இடிந்து விழுந்த சுரங்கப்பாதையில் இருந்து 17 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்ட தொழிலாளர்களிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார்.
இது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்த பிரதமர் மோடி, “உத்தர்காசியில் நடைபெற்ற மீட்பு நடவடிக்கையின் வெற்றி அனைவரையும் உணர்ச்சிவசப்படுத்தியுள்ளது. உங்கள் தைரியமும் பொறுமையும் அனைவரையும் ஊக்குவித்துள்ளது என்பதை சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த நண்பர்களிடம் நான் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் நலமுடனும் ஆரோக்கியத்துடனும் இருக்க வாழ்த்துகிறேன்” என்று ட்வீட் செய்திருந்தார்.