சித்தராமையா முதல்வர் ஆகாவிட்டால், பாதி மீசையை எடுப்பதாக ஆறு வயது சிறுவன் கூறி இருப்பது, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவில் காங்கிரஸ் பெரும்பான்மை இடங்களைப் பிடித்தது. இதனையடுத்து தனது முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் கர்நாடகத்தின் முதல்வர் யார் என்ற போட்டி தற்பொழுது காங்கிரஸ் கட்சியில் நிலவி வருகிறது.சித்தராமையா மற்றும் டி.கே.சிவகுமார் ஆகிய இருவரின் ஆதரவாளர்களும் தங்களது தலைவர் தான் முதல்வராக வேண்டும் என்று போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.
இதனையடுத்து கர்நாடகாவில் 48 மணி நேரத்தில் புதிய அமைச்சரவை பதவியேற்கும் எனக் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சித்தராமையா முதல்வர் ஆகாவிட்டால், பாதி மீசையை எடுப்பதாக ஆறு வயது சிறுவன் கூறி இருப்பது, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
பாகல்கோட் மாவட்டம், ஜமகண்டி வட்டம் தோடல்பாகி கிராமத்தில் வசிக்கும், மாலி என்பவர் மகன் ஆதித்யா, வெறும் ஆறே வயதான இந்த சிறுவன், முதல்வர் பதவி குறித்துப் பேசி உள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.
‘கர்நாடகாவின் அடுத்த முதல்வராக, சித்தராமையா வர வேண்டும். அவர் முதல்வர் ஆகா விட்டால், எனது பாதி மீசையை எடுப்பேன். எனக்கு அவரை பிடிக்கும். பள்ளி குழந்தைகளுக்குப் பால், செருப்பு எல்லாம் கொடுத்தார்’ எனக் கூறி உள்ளார்.
இந்த ‘காணொளி’ சமூக வலைத்தளங்களில், வேகமாகப் பரவுகிறது. காணொளியைப் பார்த்த சித்த ராமையாவின் ஆதரவாளர்கள், ‘சிறுவன் கூட, சித்தராமையா தான் வர வேண்டும் என்று விரும்புகின்றான்.
அவர் மக்கள் தலைவர். அவருக்குக் கண்டிப்பாக, முதல்வர் பதவி கொடுக்க வேண்டும்’ என, கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
அதே நேரம், அறியாப் பருவத்தில் சிறுவனுக்குச் சொல்லிக் கொடுத்துப் பேச வைத்துள்ளனர்’ என பா.ஜ.,வினர் கிண்டல் அடித்துள்ளனர்