கேரள ஆளுநராக எச்.ராஜா நியமனம் செய்யப்பட்டிருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், இந்த செய்தி குறித்து உண்மைத் தன்மை என்ன என்பது குறித்து பார்க்கலாம்..
தமிழக பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கேரள ஆளுநராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஓர் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து, குமுதம் முகநூல் பக்கத்தில் வெளியான செய்தியின் படத்தையும் பலர் பதிவிட்டு பகிர்ந்து வருகின்றனர்.
முன்னதாக தெலங்கானா மாநில ஆளுநராக இருக்கும் தமிழிசை செளந்தரராஜனை வேறு மாநிலத்திற்கு மாற்றப்படலாம் என்றும், கேரளாவின் ஆளுநராக உள்ள ஆரிஃப் முகமது கானை தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில்தான், எச்.ராஜா கேரளா ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.
ஆனால் இதுகுறித்து, பாஜக தரப்பு வட்டாரங்கள் கூறும்போது, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கேரளாவின் ஆளுநராக பதவி நியமனம் செய்திருப்பதாக வலம் வருகிறது. அப்படியொரு அறிவிப்பு எதுவும் வரவில்லை. தலைமையிலிருந்து எந்த ஒரு அறிவிப்பும் இதுகுறித்து தெரிவிக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
அதனடிப்படையில், எச்.ராஜா ஆளுநராக நியமனம் செய்யப்பட்டிருப்பதாக வெளியான தகவல் பொய்யானது. பரவிய செய்தி போலியானது என்பது நிரூபனமாகியுள்ளது. குமுதம் இணையதளத்தில் இந்த செய்தி பதிவிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்டுள்ளது
ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு எச்.ராஜா ஆளுநராகிறார் என்ற செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.