கோவை டாக்டர் முத்தூஸ் மருத்துவமனைக்குச் சொந்தமான மூன்று இடங்களில் வருமான வரித் துறையினா் (muthus hospital) திடீா் சோதனை மேற்கொண்டனா். கோவையில் சரவணம்பட்டி, சிங்காநல்லூா் மற்றும் மதுக்கரை பகுதியில் உள்ள ஒரு டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை மற்றும் அவா்கள் நடத்தி வரும் ஒரு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி ஆகிய இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.
புதன்கிழமை காலை 11 மணியளவில் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் திடீரென மருத்துவமனைக்கு வந்துள்ளனர். மருத்துவமனை என்பதால் அங்கு சிகிச்சை பெறுபவர்களுக்கும் சிகிச்சை பெற வருபவர்களுக்கும் சிரமம் ஏற்படக்கூடாது என்பதால் கதவுகளை பூட்டாமல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சிங்காநல்லூர் மருத்துவமனையில் நிர்வாக இயக்குனர் டாக்டர் முத்து சரவணன் குமாரின் அறை மற்றும்
அலுவலக அறைகளை தீவிர சோதனை செய்தனர். பின்னர் அக்கவுண்ட்ஸ் பிரிவில் அமர்ந்து அவர்கள் கணக்கு வழக்குகளை சரி பார்க்க துவங்கினர் .அதே சமயத்தில் மற்றொரு குழுவினர் டாக்டர் முத்து சரவணக்குமாரை மதுக்கரை பகுதியில் உள்ள டாக்டர் முத்தூஸ் ஹெல்த் சயின்ஸ் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர்.
கடந்த இரண்டு வருடங்களாக பூட்டிய நிலையில் இருக்கும் இந்த கல்லூரி வளாகத்தில் உள்ள அறைகளில் தீவிர சோதனை நடத்தினர். மற்றொரு குழுவினர் சரவணம்பட்டியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சோதனை நடத்தினர் .
நள்ளிரவையும் தாண்டி சோதனை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது .அதேபோல டாக்டர் முத்து சரவணக்குமாரின் வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் .மறுநாள் வியாழக்கிழமை அதிகாலை 5 மணி வரை தீவிர சோதனை நடைபெற்றது.
சோதனைக்கு பின் அதிகாரிகள் சுமார் 20 கோடி ரூபாய் அளவில் ரொக்கமாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இவர்கள் நடத்தி வரும் தயா ஹெல்த் கேர் என்ற மருத்துவ நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளையும் ஆய்வு செய்துள்ளனர் .
மருத்துவமனையின் வங்கிக் கணக்கிற்கு ஏராளமான பணம் வேறு வங்கி கணக்குகளில் இருந்து வந்துள்ளதும் அதனை அவர்கள் ரொக்கமாக எடுத்து சிலருக்கு கொடுத்துள்ளது குறித்தும் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
சுமார் 17 மணி நேர சோதனைக்கு பின் வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களுடன் புறப்பட்டு சென்றனர். இதில் பல்வேறு ஆவணங்கள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மக்களவைத் தோ்தலில் வாக்காளா்களுக்கு கொடுப்பதற்காக அந்த மருத்துவமனைக்குச் சொந்தமான ரகசிய இடங்களில் பல கோடி ரூபாய் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல்களின் அடிப்படையில் வருமான வரித் துறை அதிகாரிகள் இந்த சோதனையை மேற்கொண்ட தாகக் கூறப்படுகிறது.
இங்கிருந்து கைப்பற்றப்பட்ட பணத்துக்கு உரிய ஆதாரங்களை வருமான வரித் துறை அதிகாரிகள் கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. கைப்பற்றப்பட்ட பணம் மருத்துவ சேவையின் மூலம் பெறப்பட்டதா அல்லது ஹவாலா உள்ளிட்ட வேறு வகைகளில் பணம் பெற்று அதனைப் பதுக்கி வைத்திருந்தனரா என்பது குறித்தும், பினாமி மூலமாக பணத்தைப் பெற்று அதனை வாக்காளா்களுக்கு வழங்கத் திட்டமிட்டு இருந்தனரா என்பது குறித்தும் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
வருமான வரித் துறையினா் கைப்பற்றியுள்ள பணம் தொடா்பாக தோ்தல் ஆணைய அதிகாரிகளும் ஆதாரங்களைக் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இதுதொடா்பாக மருத்துவமனை நிா்வாகத்தினரிடம் கேட்டபோது , வருமான வரித் துறை அதிகாரிகள் வந்து சுமாா் 2 மணி நேரம் விசாரணை நடத்திச் சென்ாகவும், வேறு எந்தத் தகவலும் இல்லை எனவும் கூறினா். அதேபோல, இது தொடா்பாக வருமான வரித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது எந்தத் தகவலும் தெரிவிக்க மறுத்துவிட்டனா்.
வருமானவரித்துறை சோதனை துவங்கிய சிறிது நேரத்தில் நூறு கோடி ரூபாய்க்கு மேல் கல்லூரி வளாகத்தில் உள்ள ரகசிய அறைகளில் பணத்தை பதிக்க வைத்திருந்ததாகவும் அந்த பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியதாகவும் தகவல் வேகமாக பரவியது. இது அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக அமைச்சர் குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதால் இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டு பின்னர் வாக்காளர்களுக்கு தேர்தல் சமயத்தில் கொடுக்கப்பட இருந்ததாகவும் தகவல் பரவியது.
ஆனால் சோதனை முடிவில் அவ்வளவு பணம் கைப்பற்றப்படவில்லை என்பது தெரிய வந்தது .17 மணிநேர சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் வருமானவரித் துறை அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனையை துவக்கி 10 ஆண்டுகளிலேயே இவ்வளவு பணம் ரொக்கமாக இருந்தது எப்படி? (muthus hospital) ரொக்கமாக பதுக்கி வைத்திருந்தது ஏன் என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.