மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணையை ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது.
இந்த ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில் நேற்று காலை அவர் ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
அப்போது ”மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சை வழங்கப்பட்டது ? எந்தெந்த மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினார்கள் என்ற விவரம் எனக்கு தெரியாது” என வாக்குமூலம் அளித்துள்ளார். கூடுதலாக ஜெயலலிதா எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற விவரம் கூட எனக்கு தெரியாது என்று ஓபிஎஸ் கூறியிருந்தார்.
மேலும் சொந்த ஊரில் இருந்த போது நள்ளிரவில் உதவியாளர் மூலம் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிப்பது தெரிய வந்ததாகவும், அடுத்த நாள் பிற்பகலில் அப்பல்லோ மருத்துவமனை சென்ற போது அங்கிருந்த தலைமைச் செயலாளரிடம் விவரங்களை கேட்டறிந்ததாகவும் ஓ.பன்னீர்செல்வம் ஆணையத்தில் கூறியுள்ளார்.
இதனை அடுத்து விசாரணை ஆணையம் அமைக்கக் கோரியது யார் என்ற ஆணையத்தின் கேள்விக்கு, பொது மக்களின் கோரிக்கை அடிப்படையிலேயே அமைக்கப்பட்டதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெயலலிதாவுக்கு சர்க்கரை நோய் இருந்தது மட்டுமே தெரியும் என்றும் வேறு என்ன உடல் உபாதைகள் இருந்தது என்றும் தனக்கு தெரியாது என ஓ.பன்னீர்செல்வம் ஆறுமுகசாமி ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில், 2வது நாளாக சென்னையில் உள்ள ஆணைய அலுவலகத்தில் ஆஜரான ஓ.பி.எஸ்.சிடம் கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே ஜெயலலிதா சிகிச்சை குறித்து எதுவும் தெரியாது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்த நிலையில், தர்மயுத்தம் நடத்தி பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்துவிட்டு இப்போது இப்படி பேசுகிறீர்களே தர்மபிரபு இது நீங்களா? என அவரின் கருத்துக்கு நெட்டிசன்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.