ஜோர்டானில் நடந்து வரும் 20 வயதுக்குட்பட்டோர் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பிரியா மாலிக் தங்கம் வென்று அசத்தி உள்ளார்.
ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி ஜோர்டானில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் பெண்களுக்கான 76 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் பிரியா மாலிக் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் லாரா செலிவ் குஹனை இந்தியாவின் பிரியா மாலிக் எதிர் கொண்டார். இதில் 5-0 என்ற புள்ளி கணக்கில் லாரா செலிவ் குஹனை வீழ்த்தி தங்கம் வென்றார்.
இதன் மூலம் அவர் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற 2-வது இந்திய வீராங்கனை என்ற சிறப்பை பெற்றார்.
இந்த போட்டியின் போது பிரியா மாலிக்கின் இடது கண்ணுக்கு மேலே காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்த போதிலும், அதனை கண்டு கொள்ளாமல் தனது அசாத்திய திறமையால் அவர் வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.