மோசடி வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், லதா ரஜினிகாந்துக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு ரஜினிகாந்த்தை வைத்து, கோச்சடையான் என்ற திரைப்படத்தை, அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி இருந்தார். இப்படத்தை மீடியா ஒன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்த முரளிக்கு ஆட் பீரோ நிறுவனத்தைச் சேர்ந்த, அபிர்சந்த் என்பவர் சுமார் ரூ.6.2 கோடி கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த கடன் தொடர்பாக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையொப்பம் செய்திருந்தார். இப்படம் வெளியாகி மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்ததால், முரளியால் வாங்கிய கடனை திரும்பி செலுத்த முடியவில்லை.
லதா ரஜினிகாந்த் மீது வழக்கு
பின்பு முரளி கடனாக பெற்ற பணத்தை திருப்பி தராததால் முரளி மற்றும் லதா ரஜினிகாந்த் மீது கடந்த 2015ம் ஆண்டு பெங்களூரு மாநகர 6வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் அபிர்சந்த் நஹாவர் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி லதா ரஜினிகாந்த் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த மனுவிற்கு எதிராக ஆட் பீரோ நிறுவனம் உச்சநீதிமன்றத்துக்கும் சென்றது.
லதா ரஜினிகாந்துக்கு பிடிவாரண்ட்
இந்த வழக்கு தொடர்பான விசாரணை கடந்த 8 வருடங்களுக்கு மேலாக கீழமை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்ற விசாரணையின் போது ஜனவரி 6-ந் தேதி அல்லது அதற்கு முன் பெங்களூரு கூடுதல் மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் லதா ரஜினிகாந்த் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இந்த மோசடி புகாரில் நீண்ட காலமாக நேரில் ஆஜராகவில்லை என்ற அடிப்படையில், லதா ரஜினிகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது.
லதா ரஜினிகாந்துக்கு நிபந்தனை ஜாமின்
இந்த நிலையில், இன்று பெங்களூரு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், லதா ரஜினிகாந்துக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி, வழக்கை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.