சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சிபிஐ (எம்) மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் கூறிருப்பதாவது :
தமிழ்நாட்டில் சுமார் 5.80 லட்சத்திற்கும் மேற்பட்ட குறு-சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்நிறுவனங்களில் சுமார் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்து வருவதும் இத்தகைய தொழில் நிறுவனங்களேயாகும். பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி., கொரோனா பேரிடர் போன்றவைகளால் இந்நிறுவனங்கள் பெரும் பாதிப்பையும், இழப்பையும் சந்தித்து ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. தற்போது மின் நிலைக்கட்டணம் உயர்வும் கூடுதல் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, மூன்று லட்சத்து ஐம்பதாயிரத்துக்கு மேற்பட்ட குறு-சிறு, நடுத்தர தொழில் முனைவோர்கள், எல்.டி 111 – பி என்ற மின் இணைப்பை பெற்றவர்கள். மற்ற மின் நுகர்வோர்களை போல மின்கட்டணத்தில் சலுகையோ, இலவச மின்சாரமோ, தனியார் ஜெனரேட்டர்கள் இடமிருந்து குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்கிக் கொள்ளும் அனுமதியோ, காற்றாலை மூலம் மின்சாரத்தை பேங்கிங் வசதியுடன் பெற்றுக் கொள்ளும் அனுமதியோ எதுவும் இல்லை. 100 சதவிகிதம் மின்வாரியத்தை சார்ந்தே தொழில் செய்து வருகிறார்கள்.
டிமாண்ட் சார்ஜ், புதிதாக விதிக்கப்பட்ட பீக் ஹவர் கட்டணத்தினால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட தொழில் மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான சிறு,குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகள், பவர் லூம் தொழில் உள்ளிட்டு ஜவுளித் தொழிலில் ஈடுபடும் நிறுவனங்கள் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து தொழில் செய்ய முடியாமல் மூடும் ஆபத்தில் உள்ளது. இதில் பணிபுரியும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ளனர்.
எனவே, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தமிழ்நாட்டின் கேந்திரமாக செயல்படும் குறு-சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களையும், இத்தொழிலை நம்பி வாழும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
- குறு-சிறு, நடுத்தர மின் நுகர்வோருக்கு 12 கிலோ வார்ட்டுக்குள் மின் இணைப்பு பெரும் குறுந்தொழில் முனைவோர்களுக்கு மின்சார வாரியத்தின் டாரிப்பில் 3A (1) மின் இணைப்பு வழங்க வேண்டும். ஆனால், 3க்ஷ மின் இணைப்பு வழங்குகின்றனர். இதனால் குறுந்தொழில் முனைவோருக்கு கிடைக்க வேண்டிய சலுகை பறிக்கப்படுவதுடன், கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. எனவே, குறு-சிறு, நடுத்தர மின் நுகர்வோருக்கும், எலெக்ட்ரானிக் வெல்டிங் மிஷின் கொண்டு தொழில் முனைவோருக்கும் (12KW Load) Tariff 3 A (1) மின் இணைப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
- உயர்த்தப்பட்ட நிலைக் கட்டணத்தை திரும்பப்பெற்று, ஏற்கனவே இருந்த பழைய நிலைக் கட்டணத்தையே வசூலிக்க கேட்டுக் கொள்கிறோம்.
- சிறு-குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இதுவரையில் இல்லாத பீக் ஹவர் கட்டணத்தை திரும்ப பெற வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
- தொழில் துறையினர் தங்களது நிறுவனத்திலேயே சோலார் பேனல்கள் மூலம் மின் உற்பத்தி செய்வதற்கு மானியத்தோடு ஊக்குவிப்பதும், தேவையான வங்கி கடன்களை குறைந்த வட்டியில் கிடைக்கச் செய்யவும், உற்பத்திக்கு மின் வாரியம் விதித்து வரும் யூனிட்டுக்கு ரூ 1.53 பைசா என்பதை கைவிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.
- தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள “தமிழ்நாடு பருத்தி கழகத்தை” வரவேற்கிறோம். இந்த கழகத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வரவும், இந்த கழகத்தின் மூலம் தேவையான பருத்தியை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்து, குறைந்த விலையில் வழங்கிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
- பருத்தியை மூலப்பொருளாக கொண்டு செயல்பட்டு வரும் பனியன், பவர்லூம், கைத்தறி, பஞ்சாலைகளில் ஏறத்தாழ தமிழகம் முழுவதும் 25 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நூல்விலையேற்றம், பஞ்சு தட்டுப்பாடு போன்ற காரணத்தினால் இத்தொழில் நசிவடைந்து வருகிறது. இத்தொழிலையும், தொழிலாளர்களையும் பாதுகாக்கும் வகையில் பஞ்சு தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும், நிலையற்ற நூல் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம் என கே.பாலகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்ட்டுள்ளது.