Kachchathivu : தரைமேல் பிறக்க வைத்தான் எங்களை கண்ணீரில் மிதக்க வைத்தான்…. என மீனவர்களின் வாழ்வியல் அவலத்தை உறைக்கும் இந்த வரிகளுக்கான பின்னணி என்பது இயற்கையில் நடைபெறுவது.
ஆனால், மனிதத் தவறுகளால் இன்றளவும் தமிழகத்தின் ஒரு பகுதி மீனவர்கள் துயரச் சிக்கலில் தவித்து வருகிறார்கள் என்றால் அதன்பெயர் கச்சத்தீவு.
1480ஆம் ஆண்டில் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பு மற்றும் பெரும்புயல் காரணமாக வங்கக்கடலில் ராமேஸ்வரம் உள்பட குந்துகால்,
புனவாசல், முயல் தீவு, பூமரிசான் தீவு, முல்லைத் தீவு, மணல் தீவு, கச்சத்தீவு (வாலித் தீவு), அப்பா தீவு, நல்ல தண்ணீர் தீவு, உப்பு தண்ணீர் தீவு, குடுசடி தீவு என 12 தீவுகள் உருவானதாகச் சொல்லப்படுகிறது.
கி.பி.1605-ஆம் ஆண்டில் மதுரை நாயக்க மன்னர்களால் தோற்றுவிக்கப்பட்ட சேதுபதி அரசர்கட்கு குத்துக்கால் தீவு, குருசடித் தீவு, இராமசாமித் தீவு, மண்ணாலித் தீவு, கச்சத் தீவு, நடுத் தீவு, பள்ளித் தீவு ஆகிய தீவுகள் அளிக்கப்பட்டன. 69கடற்கரை கிராமங்களும் அளிக்கப்பட்டன.
சேதுபதி மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவின் பரப்பளவு 285 ஏக்கர்கள் 20 சென்ட் ஆகும். ராமேஸ்வரத்தில் இருந்து 12 நாட்டிக்கல் மைல் தொலைவில் கச்சத்தீவு அமைந்துள்ளது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி சுவாமி ஆலயத்திற்குரிய நந்தவனம் கச்சத் தீவில் இருந்ததாகவும், அங்கிருந்து கோயில் பூசைக்கு மலர்கள் கொண்டு வரப்பட்டன எனவும்,
கோயிலுக்குக் கொடையாகக் கொடுக்கப்பட்ட கால்நடைகள் கச்சத் தீவில் மேய்ச்சலுக்கு விடப்பட்டு, அங்கிருந்து அபிசேகத்திற்குப் பாலும், தேவையான பஞ்சகவ்யங்களும் வந்தன என்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கிழக்கிந்தியக் கம்பெனியின் பிடியில் இந்தியா வந்த பின்னாட்களில் 1803ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ஜமீந்தாரிணி முறை கொண்டு வரப்பட்டது.
அப்போது ராமநாதபுரம் ராஜாவிடம் இருந்து கச்சத்தீவை பயன்படுத்திக் கொள்ளும் உரிமையை கிழக்கிந்தியக் கம்பெனி பெற்றுக் கொண்டது.
பின்னாட்களில் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் இருந்து இங்கிலாந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு ஆட்சி அதிகாரம் என்றபோது, விக்டோரியா மகாராணி தன் பிரகடனத்தில், கச்சத்தீவு, ராமநாதபுரம் ஜமீனுக்கு உரியதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த கச்சத்தீவினை, மன்னரிடம் அனுமதி பெற்று பலரும் குத்தகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர். மீனவர்கள் இங்கு தங்கி இருந்து மீன்பிடி தொழிலிலும் ஈடுபட்டுள்ளானர்.
அப்போதுதான் தொண்டியைச் சேர்ந்த மீனவரான சீனிகருப்பன் படையாச்சி தங்கள் வழிபாட்டுக்காக புனித அந்தோணியார் கோயிலை கட்டியதாக சான்றுகள் தெரிவிக்கின்றன.
இந்தக் கோயிலில் ஆண்டு தோறும் மார்ச் 4ஆம் தேதி நடைபெறும் திருவிழாவில் சென்னை மாகாண மீனவர்கள் எந்தவித தடையுமின்றி பங்கேற்றனர். ஆனால் இலங்கையைச் சேர்ந்த பக்தர்கள் அந்நாட்டரசின் அனுமதி பெற்றே வந்து சென்றுள்ளனர்.
இப்படி சென்னை மாகாணத்தை சார்ந்த பகுதியாகவே இருந்து வந்த கச்சத்தீவு, 1947 ஆம் ஆண்டு ஜமீன்தாரி ஒழிப்பு சட்டம் கொண்டு வந்த பின்னர் சேதுபதி மன்னர்களிடம் இருந்து அரசின் கைகளுக்கு சென்றது.
ஆனாலும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு கச்சத்தீவுகுறித்து பெரிதாக அக்கறை காட்டவில்லை என்றே கூறப்படுகிறது.
கச்சத்தீவு தொடர்பான பிரச்சனை பாராளுமன்றத்தில் எழுந்த போது நேரு, இப்பிரச்சினை குறித்து போதிய தகவல்கள் என்னிடம் இல்லை என்றும் இது தொடர்பாக சென்னை அரசிடம் விபரம் கோரி இருப்பதாகவும் கூறினார்.
இந்த சின்னஞ்சிறிய தீவு குறித்து இரு அரசுகளும் தமக்கிடையில் மோதிக் கொள்ளப் போவதில்லை என்றும் குறிப்பாக எமது அண்டை நாடான இலங்கையுடன் இது குறித்து தேசிய கௌரவப் பிரச்சினை எதுவும் சம்பந்தப்படவில்லை எனவும் உதாசீனமான பதிலைத் தெரிவித்தார்.
1956க்கும் பின்னால், இந்தியா தன்னுடைய கடல் எல்லைக் கோட்டை 6 கடல் மைல்களாக விரிவுபடுத்தியதோடு, மீன்பிடிக்கும் உரிமையை 100 கடல் மைகள் தூரத்துக்கும் விரிவுபடுத்தியது. இதற்கு இலங்கை எதிர்ப்பு தெரிவித்ததோடு, 1970ல் அதே போன்ற ஒரு அறிவிப்பை இலங்கை அரசு வெளியிட்டது.
இதையும் படிங்க : “இது காதல் பாட்டு பாடும் களமல்ல..!” – தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்!
இதைத் தொடர்ந்து கச்சத்தீவு Kachchathivu தனக்குத்தான் சொந்தம் என்று இலங்கை உரிமைக் கொண்டாடத் தொடங்கியது.
இது இருநாடுகள் இடையேயும் மனக்கசப்பை விதைத்துக் கொண்டிருந்த நிலையில்தான் அப்போதைய இந்திய பிரதமர் இந்திராகாந்தியும், இலங்கை அதிபர் சிறீமாவோ பண்டார நாயகேவும் நடத்திய பேச்சுவார்த்தையில் தமிழகத்தை கேட்காமலேயே கச்சத்தீவு இலங்கைக்கு கைமாறியது.
இது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பைக் கிளப்பியது.. அப்போது, ‘தமிழக மீனவர்கள் கச்சத் தீவை ஒட்டி மீன் பிடித்துக் கொள்ளலாம். மீன் பிடிக்கும் வலைகளை கச்சத் தீவில் உலர வைக்கலாம், ஒய்வு எடுத்துக்கொள்ளலாம்.
இது தவிர, கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டு திருவிழாவில் கலந்து கொள்ளலாம் எனும் உரிமை தமிழகத்திற்கு உள்ளது’ என்று மத்திய அரசு அவர்களை சமாதானப்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து 1974ஆம் ஆண்டு ஜூன் மாதம் 26ஆம் 7 சரத்துகள் கொண்ட ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதில், ஸ்ரீலங்கா மற்றும் இந்தியாவுக்கான எல்லை, பாக் ஜலசந்தி முதல் ஆதாம் பாலம் வரையிலான பகுதியாகும், என துவங்கி 5ஆவடு நிபந்தனையில்,
முந்தைய விவகாரங்களால், இந்திய மீனவர்களும் யாத்ரீகர்களும் இதுவரை உள்ளது போல் கட்சத்தீவு நுழைவை அனுபவிக்கலாம் எனவும், இந்த விசயங்களுக்கு ஸ்ரீலங்கா நாட்டின் இருந்து விசாவோ, பயண ஆவணமோ பெற வேண்டியதில்லை எனவும் தெளிவாக கூறப் பட்டுள்ளது.
மேலும், ஸ்ரீலங்கா மற்றும் இந்திய கப்பல்கள் தாங்கள் பாரம்பரியமாக அனுபவித்து வந்த உரிமையை அனுபவிக்கலாம் என தெளிவாக கூறப்பட்டுள்ளது.
அதாவது, கச்சத்தீவை இந்தியர்களைப் போலவே இலங்கை மக்களும் அனுபவிக்கலாம் என்று மட்டுமே ஒப்பந்தம் உள்ளதே தவிர, கச்சத்தீவு என்பது இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது,
இலவசமாக வழங்கப்பட்டுள்ளது என அந்த ஒப்பந்தத்தில் எந்த சரத்துமே கூறவில்லை என்பதே உண்மை. ஆனால், இந்திய அரசு கச்சத் தீவைக் “கண்டுகொள்ளாததால்” அது இலங்கையின் கைகளுக்கு தற்போது அது சென்று விட்டதாகவே கருத வேண்டியுள்ளது.
அதனை அப்போதைய தமிழக ஆட்சியாளராக இருந்த கருணாநிதியும் பெரிதாக எதிர்ப்புகளைத் தெரிவிக்கவில்லை என்கிறார்கள்.
இலங்கையில் இனப்போராட்டம் நடந்தவரை கச்சத்தீவு பிரச்சனை பெரிதாகப் பேசப்படவில்லை. தமிழக மீனவர்கள் தாராளமாக கச்சத்தீவுக்கு சென்று திரும்பினர்.
இனப்போராட்டம் முடிவுற்ற 2009 காலகட்டத்துக்குப் பின்னர்தான் இலங்கை கடற்படையின் அத்துமீறல்களால் தமிழக மீனவர்கள் உயிரிழைந்தும், காயம் அடைந்தும், கைதாகியும், தங்கள் விசைப்படகுகளை பறிகொடுத்தும் வருகின்றனர்.
இது எல்லாவற்றுக்கும் முக்கியக் காரணம் கச்சத்தீவு நம்மிடம் இல்லாததே… ஒவ்வொரு தேர்தலின் போது கச்சத்தீவை கைப்பற்றுவோம் என்பதைச் வாக்குறுதியாகச் சொல்லியே அரசியல்கட்சிகள் காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்…
ஆனால் கச்சத்தீவை Kachchathivu மீட்பதற்கான தூதனாக எந்த அரசியல் கட்சியினரும் இதுவரை வரவில்லை என்பதே கண்ணீரில் வாழும் மீனவர்களின் குமுறலாக உள்ளது.