கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் இ – சேவை மையங்கள் மூலம் இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது திமுக சார்பில், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு, இதற்கான பணிகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், செப்டம்பர் 15ஆம் தேதி, முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
முன்னாள் முதல்-அமைச்சர் அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாளான செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற விழாவில், இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் தொடங்கி வைக்கும் அடையாளமாக 13 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான ஏடிஎம் கார்டுகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார்.
இந்த திட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து அரசுக்கு வந்திருந்த 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்களில் தகுதியானவர்கள் என 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேரை அரசு தேர்ந்தெடுத்தது.
இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறத் தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் இ – சேவை மையங்கள் மூலம் செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்த விண்ணப்பங்கள், விண்ணப்பம் செய்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் வருவாய் கோட்டாட்சியர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நிராகரிக்கப்பட்ட 56.6 லட்சம் மகளிருக்கும் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் பயனாளிகளின் தொலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
குறுஞ்செய்தி மூலம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை அறிந்து கொள்ள முடியாதவர்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களை நேரில் அணுகி நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.