மதுரை வானொலி நிலையத்தின் முன்னாள் இயக்குநரும், எழுத்தாளருமான இளசை சுந்தரம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
சிறந்த சொற்பொழிவாளர், எழுத்தாளர், வானொலி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், நகைச்சுவையாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் இளசை சுந்தரம். 1970 முதல் 1976 வரை எட்டயபுரம் ராஜா மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், 1976-ல் சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் கல்வி ஒலிபரப்பில் எழுத்தாளராகப் பணியாற்றினார்.
வானொலியில் தங்கக் கப்பல் என்ற குழந்தைகளுக்கான தொடர் நாடகத்தை எழுதி, தயாரித்து வழங்கிய இவர், ஐம்பதுக்கும் மேற்பட்ட வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார். இதில் இந்திய விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை விடுதலையின் கதை எனும் தலைப்பில் குழந்தைகளுக்குக் கதை போல தொகுத்து வழங்கியது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.
பல தமிழ் வார, மாத இதழ்களில் 250க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 175 இலக்கியக் கட்டுரைகள் 150 கவிதைகள் மற்றும் 50 நாடகங்கள் எழுதியுள்ள இவர், பாவேந்தர் பாரதிதாசனின் நூற்றாண்டு விழாவின் போது பாரதிதாசன் பரம்பரை என்ற வகையில் பல கவிஞர்களைச் சந்தித்து வானொலியில் ஒலிபரப்பினார்.
இந்நிலையில், இளசை சுந்தரம் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருடைய உடல், மதுரையில் ஆண்டாள் புரத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. பல இலக்கிய படைப்புக்களை வழங்கிய எழுத்தாளர் இளசை சுந்தரத்தின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.