கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சில சிசிடிவி காட்சிகள் அவ்வப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், மீண்டும் புதிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தத மாணவி கடந்த மாதம் 13ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். மாணவி ஸ்ரீமதி பள்ளி மாடியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், தனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடி ஒப்படைக்கப்பட்டது. மாணவி தற்கொலை தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.
இந்நிலையில், ஸ்ரீமதி மரணம் தொடர்பாக புதிய சிசிடிவி காட்சிகள் தற்போதுவெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், ஸ்ரீமதியின் உடல் தரையில் இருந்த நிலையில் பள்ளியினுடைய செயலாளர் சாந்தி விடுதி காப்பாளர் உட்பட 4 பேர் மாணவியின் உடலை மருத்துவமனைக்கு தூக்கி செல்லக்கூடிய காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
பள்ளி வளாகத்தில் மாணவி நடமாடும் காட்சியும், மாடிக்கு செல்லும் காட்சியும் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது புதிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாணவி தொடர்பான சிசிடிவி வீடியோக்கள் பகுதி பகுதிகளாக வெளியாகி வருவது எப்படி? என்றும் முழு வீடியோக்களையும் போலீசார் தங்களிடம் காண்பிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.
தனியார் பள்ளி விடுதியில் மாணவி ஸ்ரீமதியை தூக்கி செல்லும் புதிய வீடியோ வைரல் pic.twitter.com/oKRDArtYXQ
— i Tamil News | i தமிழ் நியூஸ் (@ITamilTVNews) August 4, 2022