பேரிடர் காலத்தில் களத்தில் இறங்கி வேலை செய்யவேண்டியது நம் கடமை ஆனால் அரசை குறை சொல்லிக் கொண்டிருப்பதை தவிர்க்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்(kamal-haasan) கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் நிவாரணப் பொருட்களை நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்திலிருந்து வாகனங்களில் அனுப்பிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்: எதிர்பார்த்ததை விட அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு வந்தததெல்லாம் சிற்றிடர். இது பேரிடர். குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட இறங்கி வேலை செய்யவேண்டியது நம் கடமை என்று தெரிவித்தார்.
மேலும் அரசு எவ்வளவுதான் முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டாலும் இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளை ஓர் எல்லை வரைதான் கட்டுப்படுத்த முடியும். இந்தத் தருணத்தில் நமது பாதுகாப்பை உறுதி செய்துகொண்டு, அரசு இயந்திரத்தோடு கைகோர்த்து செயல்பட்டு நிலைமை சீரடைய உதவ வேண்டியது அவசியம்.
இந்தப் பேரிடர் காலகட்டத்தில் குறைகளை சுட்டிக் காட்டிக் கொண்டிருக்காமல் மக்களுக்கு உதவ வேண்டும். அரசை பிறகு விமர்சித்துக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.