திருநள்ளாரில் காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என பாமக தலைவர் ஜி.கே.மணி வலியுறுத்தியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை திருநள்ளாரில் இரவு மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட பாமக மாவட்ட செயலாளர் க. தேவமணி வீட்டிற்கு இன்று (24-10-21) சென்ற அவர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர்,
காரைக்கால் பாமக செயலர் தேவமணி படுகொலை அதிர்ச்சியும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இது சாதாரணமான சம்பவமாக கருதமுடியாது. இது திட்டமிட்ட சதி, இதற்கு பின்னணி உள்ளது என்பதை நாங்கள் தெரிவிக்கிறோம்.
ஏற்கனவே இவருக்கு அச்சுறுத்தல் இருந்துள்ள சூழலில், அவருக்கு பாதுகாப்பளிக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறை எடுத்திருக்கவேண்டும்.
ஆனால் கொலை நடந்த பகுதியில் எப்போதும் உள்ள காவல் பணியில் இருந்த காவலர் சம்பவத்தன்று இருக்கவில்லை. மேலும் இரவு நேரத்தில் தேவமணியை3 காவல்நிலையம் அழைத்து வழக்கு ஒன்றுக்காக போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். எனவே இது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது.
இதுவரை காவல்துறையினர் சரியான விசாரணையை செய்ததாக தெரியவில்லை. எனவே உண்மையை கண்டறிய சிபிஐ விசாரணை மட்டுமே சரியாக இருக்கும் என பாமக வலியுறுத்துகிறது.
தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடந்து வருகின்றன. மனித உயிர் விலை மதிப்பில்லாதது என்ற நிலையில், காவல்துறை நினைத்தால் இதனை தடுத்துவிட முடியும். தேவமணியின் குடும்பத்துக்கு கட்சி அனைத்து நிலையிலும் பாதுகாப்பாக இருக்கும். இந்த வழக்கு விசாரணயை பாமக கவனித்து வரும் என்றார்.
உடனிருந்த மாநில வன்னியர் சங்கத் தலைவர் பு.தா. அருள்மொழி கூறுகையில், தேவமணி கொலை சம்பவம் தொடர்பாக தொடர்புடையோர் குறித்த ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.
விசாரணை வரும் போது தெரிவிப்போம். வழக்கு விசாரணை என்ற பெயரில் இரவு நேரத்தில் அவரை போலீஸார் தனிமைப்படுத்தும் நோக்கில் அழைத்துள்ளனர். காவல்துறையில் கருப்பு ஆடுகள் உள்ளன. காரைக்காலில் அரசியல் தொடர்புடைய பலர் கொல்லப்பட்டுள்ளனர். பெரும் ஜாம்பவான்கள் இதற்கு பின்னணியில் உள்ளனர். இவர்கள் கண்டறிந்து தண்டனைக்குள்ளாக்கப்பட வேண்டும். எனவேதான் உள்ளூர் காவல்துறை மீது நம்பிக்கையின்மையால், மத்திய புலனாய்வுத் துறையை வேண்டுகிறோம் என்றார்.