மதமாற்ற தடைச்சட்டத்தை அவசர சட்டமாக கொண்டுவரும் கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரிலுள்ள விதான சவுதாவில் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மதமாற்றத் தடைச் சட்டம் உடனடியாக அமலுக்கு வரும் வகையில் சிறப்பு ஆணை பிறப்பிப்பது தொடர்பாக விவாதித்து, அதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக கர்நாடக அமைச்சர் ஜே.சி.மாதுசாமி தெரிவித்தார். இதற்கு கர்நாடக எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
இது தொடர்பாக, கர்நாடக எதிர்க்கட்சி காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கூறும்போது,
’’தற்போது கொண்டுவரும் இந்த மதமாற்றத் தடைச் சட்டம் ஆர்.எஸ்.எஸ்-ன் அரசியல் திட்டம். உண்மையான இந்துக்கள் நல்லிணக்கத்தையும் உலகளாவிய சகோதரத்துவத்தையும் கடைப்பிடிக்கின்றனர், மேலும் பா.ஜ.க-வின் வகுப்புவாத அரசியலை நிராகரிப்பார்கள்.
பா.ஜ.க ஆட்சிக்கு வரும்போதெல்லாம் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை நாம் பார்க்கிறோம். இந்த அரசால் கர்நாடக மக்கள் வெட்கப்படுகிறார்கள். இந்த அவசரச் சட்டத்தில் கையெழுத்திட வேண்டாம் என்று ஆளுநரை வலியுறுத்துகிறேன்.
ஊழல் மற்றும் நிர்வாகக் குறைபாடு ஆகியவற்றிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப பா.ஜ.க அரசு மதமாற்ற தடைச் சட்டத்தை அவசரச் சட்டம் மூலம் மக்கள் மீது திணிக்க முயல்கிறது. கட்டாய மத மாற்றத்தைத் தடுக்க கர்நாடகாவுக்கு புதிய சட்டம் தேவையில்லை. ஏற்கெனவே நம்மிடம் இருக்கும் சட்டம் அச்சுறுத்தல்கள் மூலமும், கட்டாயப்படுத்தப்படுதல் மூலமும் மதம் மாற்றுவதை தடுக்கக்கூடியது.
எனவே, மதமாற்றத்தைத் தடுக்கவும் ஒரு சட்டம் இங்கு இருக்கிறது. இதை நடைமுறைப்படுத்த காவல்துறையும் நீதிமன்றமும் உள்ளது. ஆனாலும், புதிய அவசரச் சட்டம் ஏன்? பா.ஜ.க-வுக்கு காவல்துறை, நீதிமன்றம் என்ற அமைப்புகளின் மீது நம்பிக்கை இல்லையா? பிறகு புதிய சட்டத்தின் அவசியம்தான் என்ன? சிறுபான்மையினரை அச்சுறுத்துவதும் துன்புறுத்துவதும்தான் ஒரே காரணம்.
தனிநபர்கள் எந்த மதத்துக்கும் சுதந்திரமாக மாறுவதற்கு அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. மதமாற்ற தடைச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது. அரசால் அச்சுறுத்தப்படும் அனைவருக்கும் எங்கள் கட்சி உறுதியாக துணை நிற்கும்” என விளக்கமளித்தார்.
இந்தக் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் மூலம் கட்டாய மதமாற்றத்துக்கு 25,000 ரூபாய் அபராதத்துடன் 3-5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கவும், 18 வயது பூர்த்தியடையாதவர்கள், பெண்கள், பட்டியலினத்தோர், பழங்குடியினரை மதம் மாற்றினால் 3-10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் எனவும், வெகுஜன மதமாற்றத்துக்கு 3-10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் அந்தச் சட்டம் முன்மொழிகிறது.
மேலும், மதம் மாற விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 60 நாள்களுக்கு முன்னதாகவும், மதம் மாறிய 30 நாள்களுக்குள் துணை ஆணையரிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிடுகிறது.